கரோனாவின்போது நிறுத்தப்பட்ட சென்னை - கோவா நேரடி ரயில் சேவை வேண்டும் என கோரிக்கை

கரோனாவின்போது நிறுத்தப்பட்ட சென்னை - கோவா நேரடி ரயில் சேவை வேண்டும் என கோரிக்கை
Updated on
1 min read

சென்னையில் இருந்து கோவாவுக்கு நேரடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கோவா முக்கியப் பங்கு வகிக்கிறது.

இளைஞர்கள், இளம் பெண்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் கோவா சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சென்னையில் இருந்து கோவா செல்ல, கரோனாவுக்கு முன்பு, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா ரயில் நிலையத்துக்கு வாரம் ஒருநாள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கரோனாவின்போது, இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, இந்த ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் தொடங்கவில்லை. இதனால், சென்னையில் இருந்து கோவா செல்லும் பயணிகள், ரயிலில் செல்வதாக இருந்தால், ரயில் மாறி செல்ல வேண்டியுள்ளது. எனவே, நேரடி ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து, சென்னையை சேர்ந்த வாசகர் ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின், பிரத்தியேக உங்கள் குரல் தொலைபேசி அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு தெரிவித்ததாவது: இந்தியாவில் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள கோவாவுக்கு சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. தற்போது, சென்னையில் இருந்து கோவா செல்வதாக இருந்தால், பெங்களூரு சென்று, அங்கிருந்து கோவா செல்ல வேண்டியுள்ளது. இதனால், கூடுதல் செலவு மற்றும் நேர விரயம் ஆகிறது.

எனவே, பயணிகள் மற்றும் சுற்றுலா செல்வோருக்கு வசதியாக சென்னையில் இருந்து கோவாவுக்கு நேரடி ரயில் சேவையை தொடங்க வேண்டும். இதுபோல, வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா சிறப்பு ரயிலையும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னை - கோவா இடையே நேரடி ரயில் சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in