

உதகை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, வெள்ளி விழா காணும் நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவர் சிலை காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலின் நடுவே கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டது. பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில், இந்தச் சிறப்பு வாய்ந்த சிலையின் 25-வது ஆண்டு வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகிகள் கூறும்போது,‘பூங்காவில் முகப்பு பகுதியில் தற்போது சிலை காட்சிபடுத்தப்பட்டுள்ளது. உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை நிறுவப்படும்’ என்றனர்.