இந்தியாவின் ஒரே இலவச ரயில்

இந்தியாவின் ஒரே இலவச ரயில்
Updated on
1 min read

இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம், பக்ரா பகுதியில் சட்லஜ் நதியின் குறுக்கே கடந்த 1948-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கியது. இதற்காக பஞ்சாபின் நங்கல் பகுதியில் இருந்து சிமென்ட், கற்கள் அணை கட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டன.

கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல 1948-ம் ஆண்டில் பஞ்சாபின் நங்கல், இமாச்சல பிரதேசத்தின் பக்ரா இடையே 13 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 1963-ம் ஆண்டு வரை பக்ரா அணை கட்டும் பணி நடைபெற்றது. இந்த காலத்தில் நங்கல் பகுதியில் இருந்து பக்ராவுக்கு நாள்தோறும் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் இலவசமாக பயணம் செய்தனர். கனரக கட்டுமான பொருட்கள் ரயிலில் எளிதாக எடுத்துச் செல்லப்பட்டன.

பக்ரா அணை கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு நங்கல்-பக்ரா இடையே இன்றுவரை இலவசமாக ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: காலை 7.05 மணிக்கு நங்கலில் இருந்து பக்ராவுக்கு இலவச ரயில் புறப்படும். இதேபோல காலை 8.20 மணிக்கு பக்ராவில் இருந்து நங்கலுக்கு இலவச ரயில் புறப்படும். வழியில் லேபர் ஹட் ஸ்டேசன், பிஆர்ஓ, பாரமலா, நெஹ்லா, ஒலிண்டா ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும். பிற்பகலில் மாலை 3.05 மணிக்கு நங்கலில் இருந்தும் மாலை 4.20 மணிக்கு பக்ராவில் இருந்தும் ரயில் புறப்படும்.

அணை கட்டும் பணியின்போது மரத்தில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. தற்போதும் அதே மர பெட்டிகளுடன் ரயில் ஓடுகிறது. டீசல் இன்ஜின் மட்டும் மாற்றப்பட்டு உள்ளது. ஆரம்ப காலத்தில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. தற்போது 3 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பெட்டி சுற்றுலா பயணிகளுக்காகவும் ஒரு பெட்டி பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் இலவச ரயிலால் பலன் அடைந்து வருகின்றனர். பக்ராவில் இருந்து நங்கல் பகுதிக்கு வாகனத்தில் செல்ல வேண்டும் என்றால் சுமார் 40 கி.மீ. தொலைவு கடினமான மலைப் பகுதியில் பயணம் செய்ய வேண்டும். ஆனால் ரயிலில் 13 கி.மீ. தொலைவை 40 நிமிடங்களில் கடக்க முடியும். இது இந்தியாவின் ஒரே இலவச ரயில் சேவை ஆகும். தற்போது நாள்தோறும் 800 பேர் நங்கல்-பக்ரா ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவர். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in