நீலகிரி மலை ரயிலில் பயணித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள்

நீலகிரி மலை ரயிலில் பயணித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள்
Updated on
1 min read

நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயிலைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 பேர், ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்தி குன்னூருக்கு சிறப்பு மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டுகளைக் கடந்தும் பொலிவு மாறாமல் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உள் நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க செய்ய முன்பதிவு செய்து காத்திருந்து, ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 14 பேர் மலை ரயிலைப் பற்றி அறிந்து கொள்ளவும், இயற்கை காட்சிகளை ரசிக்கவும் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். ரூ.6 லட்சம் செலுத்தி மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து, அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே உள்ள ஆற்றில் காந்தியின் அஸ்தி கரைத்த இடம், பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள், வளைந்து ஓடும் ஆறுகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பழமைவாய்ந்த பாலங்கள் மற்றும் பல்சக்கரம் கொண்ட தண்டவாளங்களில் நடந்து சென்று அதைப்பற்றி அறிந்து கொண்டனர். மீண்டும், மலை ரயிலில் ஏறி குன்னூர் சென்றனர். மலை ரயிலில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம் என வெளிநாட்டு பயணிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in