

உதகை: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்துள்ளதால் மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது.
தீபாவளி பண்டிகை நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி தினம் மட்டுமின்றி, நேற்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்துள்ளனர். உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
நேற்று பகல் நேரத்தில் மழை பெய்தபோதும், சுற்றுலா பயணிகள் மழையை ரசித்தபடியே படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருப்பதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, ஏராளமானோர் சுற்றுலா வாகனங்களில் நீலகிரிக்கு வருகை தந்துள்ளதால் மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகிறது. மேட்டுப்பாளையம்- உதகை மலைப்பாதையில் நேற்று வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.