

உதகை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ரோஜாப் பூங்கா, பைன் ஃபாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
வயநாடு நிலச்சரிவுக்கு பின்னர் நீலகிரி மாவட்டத்துக்கு கேரள சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குப் பின்னர், கேரள சுற்றுலா பயணிகளின் வருகை மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஓணம் மற்றும் வார விடுமுறை காரணமாக உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.