சுற்றுலா: மாஞ்சோலைக்கு செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு அனுமதி

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டங்கள் .
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டங்கள் .
Updated on
2 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,800 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி போன்ற இடங்கள் மிகச்சிறந்த சுற்றுலா தலங்கள் ஆகும்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் மணிமுத்தாறு அணையும், அதன் தெற்குப் பகுதியில் வனத்துறை சுங்கச்சாவடியும் அமைந்துள்ளன. அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி வரை செல்வதற்கு சுற்றுலா பயணிகள் எவ்வித அனுமதியும் பெற வேண்டியதில்லை.

அங்கிருந்து சுமார் 1.30 மணி நேரம் பயணத்தில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, குதிரை வெட்டி ஆகிய இடங்கள் காணத்தக்கவை. மணிமுத்தாறு அருவியைக் கடந்து சொந்த வாகனத்தில் மாஞ்சோலைக்கு செல்ல வேண்டுமானால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். மாலை 4 மணிக்குள் மணிமுத்தாறுக்கு திரும்பி வந்துவிட வேண்டும். அதேவேளை, அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் பயணித்தால் ஊத்து வரை அனுமதியின்றி செல்லலாம்.

மலைப்பாதையில் வழியெங்கும் உள்ள பள்ளத்தாக்குகள், சாலையைக் கடந்து செல்லும் விலங்குகள், அரியவகை பறவைகள், தேயிலைத் தோட்டங்கள், காட்டாறுகள், அடர்ந்த வனப்பகுதிகள் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துவிடும். குறிப்பாக பொதிகை மலையின் குளிர்ந்த தென்றல் உடலுக்கும், மனதுக்கும் மிக இதமாக இருக்கும். மாஞ்சோலையில் தங்கும் விடுதி வசதிகள் இல்லையென்றாலும், அங்குள்ள இயற்கை எழிலைக் காண தினமும் ஏராளமானோர் அங்கு சென்று வந்தனர்.

மாஞ்சோலையில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. அதுபோல், மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை அனுமதி மறுத்திருந்தது. ஒரு வாரத்துக்குப் பின்னர் மழை தற்போது குறைந்துள்ளதால் நேற்று முதல் மீண்டும் மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ ஜூலை 5-ம் தேதி முதல் மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையிடம் விளக்கம் கேட்கும் தேசிய புலிகள் ஆணையம்: திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வனப்பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்துக்கு தமிழக அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருந்தது. இக்குத்தகை 2028-ம் ஆண்டில் முடிவடைகிறது.

மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் தேயிலை தோட்ட நிறுவனம், தங்கள் பணிகளை நிறுத்திக்கொள்வதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

அத்தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாஞ்சாலை பகுதி களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் வருவதாகவும், அப்பகுதியில் இடம்பெற்றுள்ள மாஞ்சோலை கிராமத்தில் வசிக்கும் தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவது குறித்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும் வனவாசிகளை கட்டாயமாக வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உண்மை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக வனத்துறையின் தலைமை வன உயிரின காப்பாளருக்கு, புலிகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in