மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகை இடையே தலா ஒரு முறையும், உதகை-குன்னூர் இடையே தலா 4 முறையும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோடை சீசனின்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் மேட்டுப்பாளையம்-உதகை, உதகை-குன்னூர் மற்றும் உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கியது.

இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததால், ஜூலை மாதம் வரை ரயில்சேவை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு மலை ரயில்கள் ஆகஸ்ட் மாதம் வரை மீண்டும்நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை செல்லும் மலை ரயில் ஜூலை 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்குசெல்லும் சிறப்பு ரயில்கள் சனி மற்றும் திங்கள்கிழமைகளிலும் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகள், குன்னூர்முதல் உதகை வரை 5 பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். மேட்டுப்பாளைம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 92 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். குன்னூர் முதல் உதகை வரை மொத்தமுள்ள 228 இருக்கைகளில், 88 முதல் வகுப்பு, 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு உதகையை வந்தடையும். மறுநாள் காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து மலை ரயில் புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதேபோல, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.20 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு காலை9.40 மணிக்கு உதகை வந்தடையும். உதகையிலிருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in