

மூணாறு: மூணாறில் தொடர் மழை பெய்வதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் விடுதிகளிலே முடங்கிக் கிடக்கின்றனர். மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மூணாறுக்கு இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 2,3-வது வாரங்களில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு மே இறுதி வாரத்திலே பருவமழை தொடங்கியது. அவ்வப்போது பெய்து வந்த மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த 18-ம் தேதி மூணாறில் 49.4 மி.மீ. மழை பதிவானது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்துள்ளது. பருவநிலை தெரியாமல் சுற்றுலா வந்த பயணிகளும் விடுதிகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் அறைகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர். தொடர் மழையால் மாட்டுப்பட்டி, குண்டலை உள்ளிட்ட அணைகளில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூணாறில் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதுடன் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் மலைப்பாதையில் உள்ள மண்ணின் பிடிப்புத்தன்மை குறைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் உள்ளதால் மூணாறுக்கு வரும் வாகனங்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி இடுக்கி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுளளது. தொடர் மழையினால் மூணாறு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.