

உதகை: கோடை சீசன் நிறைவடைந்து, பள்ளிகள் இன்று (ஜூன் 10) திறக்கப்படுவதால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
கோடைவாசஸ்தலமான நீலகிரிமாவட்டத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்வருவார்கள். எனினும், நடப்பாண்டில் இ-பாஸ் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்தஆண்டைவிட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. உதகையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம் குறைந்துவிட்டதாக நீலகிரி மாவட்ட வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மே மாதம் கோடை சீசன்முடிந்தவுடன், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் வெயில் காரணமாக ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்த நிலையில், நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்தது. ஏற்கெனவே வந்து தங்கியிருந்தவர்களும், சொந்த ஊர் திரும்பிவிட்டனர். நேற்று வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவுக்குச் சென்று, புல் மைதானத்தில் நீண்ட நேரம் பொழுதைப் போக்கினர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைய இருப்பதால், வரும் நாட்களில் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.