3 நாள் தடையால் கன்னியாகுமரி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் இடையே தள்ளுமுள்ளு

கன்னியாகுமரி படகு இல்லத்தில்  விவேகானந்தர் பாறைக்கு செல்ல குவிந்த சுற்றுலா பயணிகள்.
கன்னியாகுமரி படகு இல்லத்தில்  விவேகானந்தர் பாறைக்கு செல்ல குவிந்த சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

நாகர்கோவில்: பிரதமர் வருகையையொட்டி 3 நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதன்கிழமை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் ஆர்வத்தில் சுற்றுலா பயணிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதால், படகு சேவை நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி நாளை (மே 30) வருவதை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்குச் செல்லும் படகு தளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

விவேகானந்தர் மண்டபத்துக்கு புதன்கிழமை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கோடை விடுமுறை என்பதால் புதன்கிழமை காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். அவர்களின் அடையாள அட்டை, பெயர், முகவரி ஆகியவற்றை பதிவு செய்த பின்னரே விவேகானந்தர் மண்டபத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்த போதிலும் கோடை விடுமுறை என்பதால் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். பிரதமர் வருகையையொட்டி இன்று முதல் 3 நாட்கள் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதன்கிழமை படகு சவாரி செய்ய டிக்கெட் எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் போட்டி நிலவியது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் ஆர்வத்தில் சுற்றுலா பயணிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை மதியம் படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in