Last Updated : 23 May, 2024 06:45 PM

 

Published : 23 May 2024 06:45 PM
Last Updated : 23 May 2024 06:45 PM

குற்றாலம் அருவிகளில் குளிக்க ஓரிரு நாளில் அனுமதி: ஆய்வுக்குப் பின் ஆட்சியர் தகவல்

குற்றால அருவிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாகவும், அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அருவிகளில் குளிக்க விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

குற்றால அருவிகளில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்தத் தடை 7-வது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது.

இந்நிலையில், குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். குற்றாலம் பிரதான அருவியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் வெள்ளத்தின் போது அபாய ஒலிகளை முன்கூட்டியே ஒலிக்கச் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் உடை மாற்றும் அறை, தரைத்தளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் “அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் காவல் துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அருவியின் மேல் பகுதியில் வெள்ளப்பெருக்கைக் கண்காணிக்க வனத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

குற்றாலம் பிரதான அருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை கட்டும் பணி, தரைத்தளம் அமைக்கும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஓரிரு நாட்களில் அனுமதிக்கப்படும். பழைய குற்றால அருவியில் வெள்ளத்தின் போது சுற்றுலா பயணிகளை அடித்துச் செல்லாதவாறு பாதுகாப்பு கம்பிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பழைய குற்றால அருவியைப் பொருத்தவரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படும். மேலும், வெள்ளத்தை முன்கூட்டியே கணிக்க கூடிய early warning system குறித்த ஆய்வுகள் நடைபெற்று அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக முதல் உதவி செய்யும் வகையில் அனைத்து அருவிகளிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது”, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x