

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது.
வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர் விழாவைத் தொடங்கிவைத்தனர்.
வரும் 26-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதையொட்டி, தோட்டக்கலைத் துறை சார்பில்7 லட்சம் மலர்களைக் கொண்டு,ஏற்காடு அண்ணா பூங்காவில்மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பிரம்மாண்ட காற்றாலை, முத்துச் சிப்பி, நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை, மீன் போன்றவை மக்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும், டொனால்டு டக், மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி ஆகியவை மரங்களை நடுவது போலவும், டோரா, புஜ்ஜி ஆகியவை மலர்ச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்த் தொட்டிகளைக் கொண்டு மலர்க் கண்காட்சியும், மலர்த் தோரணங்கள், மலர்களால் ஆன செல்ஃபி பாயின்ட் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டின் காபி ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல, தாவரவியல் பூங்கா, ஏரிப் பூங்கா, ரோஜாத் தோட்டத்திலும் மலர்ச் சிற்பங்கள், மலர் அலங்காரத் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் உள்ள சுற்றுலா மையங்களில் உள்ள மரங்கள், இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. அதேபோல, கலை, இன்னிசை நிகழ்ச்சிகள், படகுப் போட்டி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்திருந்த நிலையில், நேற்று பனியும், லேசான தூறலும் இருந்தது. ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.