தடுப்பு சுவர் இல்லாத கொடைக்கானல் மலைச்சாலை - சுற்றுலா பயணிகள் அச்சம்

க ொடைக்கானல் செல்லும் வழியில் வடகவுஞ்சி பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாத பள்ளத்தாக்கு பகுதி. படம்: நா.தங்கரத்தினம்.
க ொடைக்கானல் செல்லும் வழியில் வடகவுஞ்சி பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாத பள்ளத்தாக்கு பகுதி. படம்: நா.தங்கரத்தினம்.
Updated on
1 min read

கொடைக்கானல்: பழநி வழியாக கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் தடுப்புச் சுவர் இல்லாத பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தோடு பயணிக்கும் நிலை உள்ளது.

கொடைக்கானல் செல்ல வத்தலகுண்டு மற்றும் பழநி வழியாக இரு வழிகள் உள்ளன. பழநி வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் மலைப் பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஏராளமான அபாயகரமான வளைவுகள், பள்ளத்தாக்குகள் நிறைந்துள்ளன. ஆபத்து நிறைந்த இந்த மலைச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் சில இடங்களில் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளன.

சில இடங்களில் பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியில் தடுப்புச் சுவர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் புதிதாக பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நேற்று முன்தினம் சிதம்பரம் பகுதியில் இருந்து சுற்றுலா வந்தவர்களின் வேன் கவிழ்ந்து 7 பேர்காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கோடை சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

எனவே அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் மலைச் சாலையில் சேமடைந்துள்ள தடுப்புச் சுவர்களை சீரமைக்க வேண்டும். அபாயகரமான வளைவு, பள்ளத்தாக்கான பகுதியில் தேவைப்படும் இடங்களில் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், சேதமடைந்த தடுப்புச் சுவர்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in