Last Updated : 07 May, 2024 07:47 PM

 

Published : 07 May 2024 07:47 PM
Last Updated : 07 May 2024 07:47 PM

குமரி சம்பவம் எதிரொலி: சுற்றுலா தலங்களில் பாதுகாப்புக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல் 

கோவை: சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த காயத்ரி (25), சர்வதர்ஷித் (23), பிரவின்சாம் (23), சாருகவி (23) வெங்கடேஷ் (24) ஆகிய 5 பேர் கன்னியாகுமரி கடலில் குளித்தபோது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இச்செய்தியை கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்த துயரத்தை அவர்களின் பெற்றோர் எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை. தமிழ்நாட்டில் கடற்கரைகள், அருவிகள், ஆறுகள், மலைகள் என சுற்றுலா இடங்களில் விபத்துகள் நடப்பது சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. இவ்வாறு உயிரிழப்பவர்கள் அனைவரும் குழந்தைகள், இளைஞர்களாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சுற்றுலா தலங்களில் குறிப்பாக கடற்கரை, அருவிகள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுற்றுலாத்துறையும், தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. கடலில் குளிப்பவர்களை கண்காணிக்கவும், அவர்களை எச்சரித்து அனுப்பவும் நீச்சல் தெரிந்தவர்களை தமிழ்நாடு அரசு பணியில் அமர்த்த வேண்டும்.

ஆபத்தான கடற்கரைகளிலும், கடல் அலை அதிகமாக காணப்படும் நேரங்களிலும் யாரையும் குளிக்க கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சுற்றுலா தலங்களில் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட துயரங்களுக்கு மது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சுற்றுலா தலங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும். மதுஅருந்திவிட்டு பிரச்சினை செய்பவர்கள், மதுஅருந்திய பின் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதையும், ஓட்டுநர் மலைப் பாதையில் ஓட்ட பயிற்சி பெற்றவரா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x