

நாகர்கோவில்: கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் தகிக்கும் வெயிலால் சோர்வடைகின்றனர். நிழல்பந்தல், குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.
கன்னியாகுமரியில் கோடை சீஸனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நிழல் பந்தல்கள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால் சுற்றுலா வரும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என, குமரி சுற்றுலா ஆர்வலர் வேலவன் ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் சேவையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சுற்றுலா பயணிகள் குவிவதால் கன்னியாகுமரியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. ஏற்கெனவே வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. விவேகானந்தர் பாறை செல்வதற்காக படகு இல்லத்தில் காத்திருக்கும் பயணிகள் வெயிலால் பெரும் சிரமம் அடைகின்றனர். கைக் குழந்தைகளுடன் சுற்றுலா வருவோரின் நிலை பரிதாபமாக உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கான கோடைகால பாதுகாப்புநடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூட வைக்கப்படவில்லை. நிழல் தரும் பந்தல்கள் அமைக்கவில்லை. ஓட்டல், கடைகளுக்கு அனுமதி கொடுத்தால் கூட, அவர்கள் கடைகளின் முன்பு நிழல் பந்தல்களை அமைப்பார்கள். ஆனால், அதற்கான அனுமதியையும் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 20 ஆண்டுகளாக வழங்கவில்லை.
படகு இல்லம் செல்லும் வழி மற்றும் பிற முக்கிய பகுதிகளில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும். இது கோடைகாலம் மட்டுமின்றி மழைக் காலங்களிலும் உதவியாக இருக்கும். கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அதிகப்படியான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாதது வேதனையாக உள்ளது என்றார் அவர்.