

புதுச்சேரி: புதுச்சேரி பாரதி பூங்காவில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுக்க ரூ.500 கட்டணம் செலுத்தி நகராட்சியின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அறிவிப்பு இன்று (மே 3) முதல் நடைமுறைக்கு வந்தது. பூங்காவின் நுழைவாயில் பகுதியில் இதுகுறித்த விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பூங்காவினுள் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையும் இல்லை.
பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என அழைக்கப்படும் புதுவையில் அழகிய வீதிகள், பூங்காக்கள், ரம்மியமான கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருகிறது.அழகிய சுற்றுலா தளமான புதுச்சேரிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் அழகை ரசிப்பதற்கு வருகிறார்கள்.மேலும் புதிதாக திருமணம் செய்பவர்கள் மற்றும் பல்வேறு விசேஷங்களுக்கு போட்டோ ஷூட் எடுக்க விரும்புபவர்கள் புதுச்சேரிக்கு வருகிறார்கள்.
அவர்கள் பிரெஞ்சு கலாச்சாரம் கொண்ட பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் முன்பும் நின்று அழகிய கலைநயம் மிக்க போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த பாரதி பூங்காவிலும் பல்வேறு தரப்பு மக்கள் போட்டோ எடுத்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இங்கு ஆயி மண்டபம், புல் தரை, சிற்பங்களுடன் கூடிய கல்தூண்கள் உள்ளன. எப்போது சென்றாலும் இந்த பூங்காவுக்கு வரும் பலர் போட்டோ ஷூட், விடியோ எடுத்து வந்தனர்.
இதைப்பார்த்த புதுச்சேரி நகராட்சி புதிய அறிவிப்பை பாரதி பூங்கா முன்பு வைத்துள்ளது. பாரதி பூங்காவில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியின் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும். இதற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 3) முதல் பூங்காவில் புகைப்படங்கள், வீடியோ எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.அதேநேரத்தில் பூங்காவுக்கு வருவோர் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை. கேமராக்கள் மூலம் படம் எடுக்க மட்டுமே கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.