

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கோடை விடுமுறையையொட்டி பல்லவ மன்னர்களின் புராதன கலைச் சின்னங்களை ரசிப்பதற்காக நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இவற்றை கண்டுரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
கூட்ட நெரிசல் அதிகரிப்பு: இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், தொழிலாளர்கள் தினத்தை யொட்டி விடுமுறை தினமான நேற்று புராதன கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், கலைச்சின்ன வளாகங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. போலீஸார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.