

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தின் கோடை வாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதால், அங்குகடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல கரோனா காலத்தில் அமல்படுத்தியதுபோல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கரோனா பாதிப்பின்போது, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஊட்டி,கொடைக்கானல் செல்லும் பொதுமக்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பில் விண்ணப்பித்தால், அதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்து வந்தனர். இதில்,வாகனம், செல்லும் நபர்கள் எண்ணிக்கை, செல்லும் இடம்உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டிருந்தன.
அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம், இ-பாஸ் திட்டத்தை செயல்படுத்த தமிழகஅரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இ-பாஸ் நடைமுறை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.