இ-பாஸ் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: உதகை வியாபாரிகள் கவலை

இ-பாஸ் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: உதகை வியாபாரிகள் கவலை
Updated on
1 min read

உதகை: உதகை, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வோருக்கு, வரும் 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடை காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உதகை, கொடைக்கானல் செல்ல முடியும்.

இதுகுறித்து நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இதுதொடர்பாக தேசிய அளவில் விளம்பரம் செய்யவும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘‘சுற்றுலா பயணிகள் வருகைக்கு இ-பாஸ் முறை உத்தரவை எதிர்த்து, உள்ளூர் வியாபாரிகள், ஓட்டுநர் சங்கங்கள் சார்பில் மலர் கண்காட்சி அன்று கருப்பு கொடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவை நம்பியே உள்ளூர் வியாபாரிகள் உள்ளனர்.

எங்களுக்கு கோடை சீசன் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டுமே வருவாய் கிடைக்கும். இதுவே எங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த வருவாயில்தான் குடும்பம் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவை சமாளித்து வருகிறோம். சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்தினால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in