

ராமேசுவரம்: பாம்பனில் பாரம்பரிய ஓலை வலை மீன்பிடி முறையை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையில் இருந்து விடுபட்டு தடை செய்யப்பட்ட முறை களில் அதிகளவில் மீன்பிடிப்பதால் கடலில் சூழலியல் மண்டலம் பாதிக்கப்பட்டு கடல் வளமும் அழிந்து வருகிறது.
இந்நிலையில், கடலில் சூழலியல் மண்டலத்தைப் பாதிக்காமல் ஓலை வலை மூலம் மீன்பிடிக்கும் முறையை பாம்பனில் பாரம்பரிய மீனவர்கள் உயிர்ப்புடன் பின்பற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பாம்பன் பாரம்பரிய மீன வர்கள் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் ஓலை வலை மீன்பிடி முறை முதன்மையானது. இந்த ஓலை வலை மீன்பிடி முறை இலங்கையிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும், கேரளாவிலும் இன்றும் பின்பற்றப்படுகிறது.
முதலில் கடற்கரையிலிருந்து கடலில் படகில் துடுப்பு போட்டு குறிப்பிட்ட தொலைவுக்குச் சென்று வலையை அமைப் போம்.
பின்னர் வலையின் கயிற்றில் பனை ஓலைகளைக் கட்டி படகிலிருந்தோ அல்லது கரைக்கோ மீனவர்கள் இழுப்பார்கள்.
ஆட்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு கயிற்றின் நீளம் அதிகரித்துக்கொண்டே செல்லும். இந்த பனை ஓலையால் மீன்கள் ஈர்க்கப்பட்டு வலையில் சிக்கும்.
பிடிக்கிற மீன்கள் மூன்றாகப் பங்கு பிரித்துக் கொள்ளப்படும். வலைக்கும் படகுக்கும் ஒரு பங்கு. மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் ஓலை வலையை இழுக்கிறார்களோ அத்தனை பேருக்கும் சம பங்குகளாகப் பிரித்துக் கொடுக்கப்படும்.
மிகவும் பழமையான, பாரம்பரியமான மீன்பிடி முறையாக இருப் பதால் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் பாம்பனில் ஓலை வலை மீன்பிடியை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர், என்றனர்.