

சேலம் / மேட்டூர்: கோடை விடுமுறை காரணமாக, ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் அங்கு சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது.
நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறையில் உள்ளன. தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தில் இருந்து, தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் குளுகுளு சுற்றுலாத் தலங்களுக்கு வருவதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இதனால், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு கடந்த சில வாரங்களாக, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று, ஏற்காட்டில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை காண முடிந்தது. அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத்தோட்டம் என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளை குடும்பம் குடும்பமாக காண முடிந்தது. சேர்வராயன் கோயில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் மிகுந்திருந்தது. ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர்.
அவர்கள் மலை உச்சியில் இருந்தபடி, பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தனர். ஏற்காடு ஏரியில் உள்ள படகுத் துறையில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஏராளமானோர் படகு சவாரியில் ஈடுபட்டதால், ஏற்காடு ஏரியில் நேற்று பகல் முழுவதும் படகுகள் தொடர்ச்சியாக உலா வந்தன.
சுற்றுலாப் பயணிகள் வருகையையொட்டி, ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்திலும் சிறு கடைகளாக, நொறுக்குத் தீனி கடைகள், பழச்சாறு கடைகள், பரிசுப் பொருட்களின் கடைகள் என ஏராளமான கடைகளும் திறக்கப் பட்டிருந்தன. இதனிடையே, சுற்றுலாப் பயணிகள் வருகையால், அங்குள்ள தங்கும் விடுதிகளில் பெரும் பாலானவை நிரம்பி வழிந்தன. மேலும், உணவகங்களிலும் விற்பனை களைகட்டியுள்ளது. சாக்லேட் விற்பனையும் விறுவிறுப் படைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் வந்ததால், ஏற்காடு சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது. எனினும் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்து பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளதால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் என சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், வியாபாரி களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கோடை காலம் முடியும் வரை, ஏற்காடு திருவிழாக் கோலத்தில் இருக்கும் என்பதால், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூரில்...: இதபோல, மேட்டூருக்கும் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள், பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அணைப் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அணைப் பூங்காவுக்கு நேற்று 7,814 பேர் வந்து சென்றதில் பார்வையாளர் கட்டணமாக ரூ.39,070, பவள விழா கோபுரத்தைக் காண 303 பேர் வந்து சென்றதில் பார்வையாளர் கட்டணமாக ரூ.1,515 வசூலானது.