

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 17-ம்தேதி தொடங்குகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை காரணமாக வழக்கத்தைவிட முன்னதாகவே கோடை விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மலைகளின் இளவரசி கொடைக் கானலில் ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் தொடங்கி 10 நாட்களுக்கு கோடை விழா கொண்டாடப்படும். இவ்விழாவின் தொடக்கமாக முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும்.
இந்த ஆண்டு வழக்கம்போல் மே இறுதி வாரத்தில் கோடை விழா தொடங்கினால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான ஜூன் 4-க்கு முதல் நாள் முடிவடையும். மாவட்ட ஆட்சியர்தான் தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ள நிலையில், அவரது தலைமையிலான அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.
இதன் காரணமாக ஒரு வாரம் முன்னதாகவே கோடை விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து மே 17-ம் தேதி கோடை விழாவைத் தொடங்கி மே 26-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலர் கண்காட்சி மே 17 முதல் 19 வரை நடத்தப்படவுள்ளது. மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பூக்கள் மே முதல் வாரத்தில் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிடும். எனவே, அதைப் பராமரிப்பதற்கான பணிகளை தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை விழாவில் கொடைக் கானலின் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், மினி மாரத்தான் போட்டி, நாய்கள் கண்காட்சி, மீன்பிடிக்கும் போட்டி, படகுப் போட்டி உள்ளிட்டவை நடைபெறும்.
தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறாததால் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 4-ம் தேதி வரை அமலில் உள்ளன. இதனால், இந்த ஆண்டு கோடை விழாவில் மாநில அமைச்சர்கள் பங்கேற்க முடியாது.
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெறும் கோடை விழா, மலர் கண்காட்சியில் தோட்டக் கலைத் துறை, சுற்றுலாத் துறை மாநிலச் செயலர்கள் மட்டுமே முக்கியப் பிரமுகர்களாக பங்கேற்க உள்ளனர். கோடை விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சுற்றுலாத் துறையினர் செய்து வருகின்றனர்.