Published : 22 Apr 2024 04:10 AM
Last Updated : 22 Apr 2024 04:10 AM

புதுச்சேரி - நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் வெள்ளோட்டம்

நோணாங்குப்பம் படகு குழாமில் பானானா ரைடர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மக்கள வைத் தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. எல்லைகளில் வாகன சோதனை நடைபெற்றதால், புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்ததால், தற்போது புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித் துள்ளது. குறிப்பாக தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து நேற்றும், நேற்று முன் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

நேரு வீதி, காந்தி வீதி மற்றும் புல்வார்டு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலமான நோணாங்குப்பம் படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் இங்கு தற்போது 20 பேர் செல்லக்கூடிய படகு 6, 30 பேர் பயணிக்கும் படகு ஒன்று, 40 பேர் செல்லும் படகு இரண்டு, 80 பேர் செல்லும் படகு ஒன்று உள்ளன.

இந்த படகு குழாமை பொருத்த வரையில் ஆற்றில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தபடி சுமார் 3 கி. மீ் தூரம் பயணம் செய்து பாரடைஸ் கடற்கரைக்கு செல்லலாம். மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19-ம் தேதி படகு குழாம் மூடப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக படகு சவாரி மூலம் நேற்று முன்தினம் ( ஏப். 20 ) மட்டும் ரூ. 4 லட்சத்து 7 ஆயிரம் கட்டணம் வசூலானது.

இந்நிலையில் நேற்று ( ஏப். 21 ) படகு சவாரி மூலம் ரூ. 3 லட்சத்து 42 ஆயிரம் கட்டணம் வசூலானது. சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில் பனானா ரைடர் அறிமுகம் செய்வதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதுபற்றி சுற்றுலா படகு குழாம் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘கடந்த ஓராண்டுக்கு முன்பே பனானா ரைடர் படகுவாங்கப்பட்டு கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அதன்பிறகு அது இயக்கப்படாமல் இருந்தது.

மீண்டும் இயக்க முடிவு செய்து நேற்று ( நேற்று முன்தினம் ) வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்கலாம். தூரத்தை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும். இது அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் கூடுதலாக பொழுதை கழிக்க இந்த பனானா ரைடர் ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x