

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மூணாறு பகுதியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மலைப் பகுதியை விட்டு தேயிலை தோட்டம் மற்றும் நகருக்குள் விலங்குகள் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, யானைகள் அடிக்கடி இது போன்று உணவு தேடி வந்து கொண்டிருக்கிறது. நேற்று நேரிமங்கலம் என்ற பகுதியில் சாலையோரம் வந்த காட்டு யானை ஒன்று, அப்பகுதியில் உள்ள புற்களை உண்ணத் தொடங்கியது.
திருவனந்தபுரம் பிரதான சாலை என்பதால், வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருந்தன. இருப்பினும், யானை எவ்வித மிரட்சியும் இன்றி அப்பகுதியிலேயே மேய்ந்து கொண்டிருந்தது. சாலையோரம் காட்டுயானை நிற்பதைப் பார்த்த பல வாகன ஓட்டிகள் பதற்றமடைந்தனர். அப்பகுதியை வேகமாக கடந்து சென்றனர். சிலர் யானையை போட்டோ, வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அந்த யானை ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் காட்டுக்குள் சென்றது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சமீப காலமாக சாலையோரங்களில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் யானைக்கு எவ்விதத்திலும் தொந்தரவு அளிக்கக் கூடாது. சாலையில் யானை இருந்தால் தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட வேண்டும். சிறிது நேரத்தில் யானை தானாகவே விலகிச் சென்றுவிடும். சுற்றுலாப் பயணிகள் இது போன்ற நேரத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளனர்.