கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - ஏற்காட்டுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
சேலம் / மேட்டூர்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மக்கள் விடுமுறை நாட்களில் நீர் நிலைகள் சார்ந்த சுற்றுலாத் தலங்கள், குளு குளு சூழலைக் கொண்ட மலைவாழிடங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், புனித வெள்ளி விடுமுறை மற்றும் தொடர்ந்து சனி, ஞாயிறு என அடுத்தடுத்த நாட்களும் பலருக்கு விடுமுறை நாளாக அமைந்தது.
3 நாள் விடுமுறை காரணமாக சேலத்தை அடுத்துள்ள ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு, 3 நாட்களுகே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், ஏரிப் பூங்கா ஆகிய இடங்களில், நேற்று சுற்றுலாப் பயணிகளை குடும்பம் குடும்பமாக காண முடிந்தது. இதேபோல, புதுமணத் தம்பதிகள், கல்லூரி நண்பர்கள் ஆகியோரையும் ஏற்காட்டில் ஆங்காங்கே காண முடிந்தது.
படகு சவாரி செய்திட விரும்பி, ஏற்காடு ஏரி படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், அங்கு வழக்கத்தை விட நேற்று கூட்டம் மிகுந்திருந்தது. இதேபோல, மலை விளிம்பில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான பகோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் காட்சி முனைப் பகுதி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து, மலை விளிம்பில் இருந்து பள்ளத்தாக்குப் பகுதிகளின் அழகை கண்டு ரசித்தனர்.
சுற்றுலாப் பயணிகளில் பலரும் காட்சி முனைப் பகுதி, ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களில் புகைப் படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்ததால் ஏற்காட்டில் உள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சேலம் - ஏற்காடு மலைப் பாதையிலும் போக்கு வரத்து அதிகமாக இருந்தது.
மேட்டூரில்...: இது போல, மேட்டூர் வந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் நீராடி, அணைக்கட்டு முனியப்ப சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, அணையின் அழகை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் அணைப் பூங்காவில் உள்ள மீன்காட்சியகம், பாம்புப் பண்ணை, மான் பண்ணை, முயல் பண்ணை மற்றும் பவள விழா கோபுரம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அணைப் பூங்காவுக்கு நேற்று 6,069 பேர் வந்து சென்றனர்.
இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.30 ஆயிரத்து 345 வசூலானது. அணையின் பவள விழா கோபுரத்தை காண 329 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.1,645 வசூலானது.கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பலர், அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
