Published : 07 Mar 2024 06:21 AM
Last Updated : 07 Mar 2024 06:21 AM

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்: ராமேசுவரத்தில் சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா சிறப்புப் பேருந்து சேவையைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்தில் இருந்தும் போதுமான பேருந்து வசதிகள் இல்லை. ஆட்டோ, தனியார் வாகனங்களில் செல்வதற்கு ஓட்டுநர்கள் கேட்கும் அதிக கட்டணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு சுற்றுலாப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ராமேசுவரத்தில் உள்ள ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலங்களை பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் சிரமமின்றி கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலாப் பேருந்து சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் இரவு தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மகேந்திரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தச் சிறப்புப் பேருந்துகள் ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, சீதா தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம்,கலாம் இல்லம், ரயில் நிலையம்,கலாம் நினைவிடம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும். இதற்குப் பயணக் கட்டணம் ரூ.80 செலுத்தி அந்தப் பயணச்சீட்டை பயன்படுத்தி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை எந்த நிறுத்ததிலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம்.

இந்தச் சிறப்புப் பேருந்துகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x