

“காஷ்மீர் அழகில் கிறங்கிப்போனேன். அது என்றும் என் நினைவில் இருக்கும்” என்று தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அண்மையில் அவர் தனது குடும்பத்துடன் காஷ்மீர் சென்றிருந்தார். அது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோவை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியும் சிலாகித்துப் பாராட்டியுள்ளார்.
சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீர் எனது நினைவில் ஒரு சுகானுபவமாக கலந்திருக்கும். அங்கு எங்கெங்கு காணினும் பனி படர்ந்திருந்தது. இருப்பினும் காஷ்மீர் மக்களின் தன்னிகரற்ற விருந்தோம்பல் எங்களுக்கு இதமான அனுபவத்தைத் தந்தது. பிரதமர் நரேந்திர மோடி நம் தேசத்தில் காண வேண்டியவை நிறைய இருக்கின்றன எனச் சொல்லியிருந்தார். அது உண்மைதான். இந்த காஷ்மீர் பயணத்தில் அதை உணர்ந்தேன்.
காஷ்மீர் வில்லோ (Willow) மர கிரிக்கெட் மட்டைகள் ‘மேக் இன் இந்தியா’வுக்கு சிறந்த உதாரணம். மேக் ஃபார் வேர்ல்டுக்கும் சாட்சி. காஷ்மீர் வில்லோ மர மட்டைகள் உலகம் முழுவதும் பயணிக்கின்றன. இப்போது உலக மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும், காஷ்மீரைக் காண வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். வியத்தகு இந்தியாவின் பல்வேறு விலைமதிப்பற்ற ஆபரணங்களில் காஷ்மீரும் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார். வீடியோவின் முடிவில் “காஷ்மீர் மிகவும் அழகாக இருக்கிறது. அதன் அழகில் நான் தலைசுற்றிப் போனேன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் சச்சின் பகிர்ந்த மான்டேஜ் வீடியோவில் அவர் பனிப்பொழிவை ரசிப்பதும், உள்ளூர்வாசிகளுடன் கலந்துரையாடுவதும், தேநீர் அருந்துவதும், சாலையோர கிரிக்கெட் விளையாடுவதும், கோயிலில் பிரார்த்தனை செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திட்டு ஊக்குவிப்பதும், உரி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியான அமான் சேதுவில் அவர் உலாவுவதும் என பல சுவாரஸ்யக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சச்சினின் இந்த வீடியோ இச்செய்தியைப் பதிவிட்டபோது 2 லட்சம் பார்வைகளை எக்ஸ் தளத்தில் கடந்திருந்தது.
பிரதமர் பாராட்டு: சச்சின் வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இதைப் பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கின்றது. சச்சினின் ஜம்மு காஷ்மீர் பயணத்திலிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று வியத்தகு இந்தியாவின் பல பகுதிகளைக் கண்டு ரசிக்க வேண்டும். இன்னொன்று மேக் இன் இந்தியாவின் முக்கியத்துவம். நாம் ஒன்றிணைந்து வளர்ந்த பாரதம், தன்னம்பிக்கை நிறைந்த பாரதத்தை உருவாக்குவோம்” எனப் பதிவிட்டுள்ளார்