

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக மலர் கண்காட்சியில் இடம்பெற்ற மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தாவரவியல் பூங்காவில் 6-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மலர் கண்காட்சி நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இப்பகுதியில் தென்னை வாடல் நோய் பாதிப்புக்கு தீர்வு காண வேளாண் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட விட மாட்டோம்” என்றார்.
இக்கண்காட்சியில் 2 லட்சம் மலர்களை கொண்டு 13 வகையான வடிவமைப்புகள் இடம்பெற்றுள் ளன.யானைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி, கேரட் ருசிக்கும் முயல், வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளை, பொங்கல் விழா, நிலவில் இறங்கிய சந்திரயான் மாதிரி, சிறுதானியங்களை கொண்டு உருவாக்கப்பட்ட செஸ் விளையாட்டு பலகை, இசைக் கருவிகளை கொண்டு அமைக்கப்பட்ட மாதிரிகள், நெதர்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட 5 ஆயிரம் துலிப் மலர் தோட்டம் என 13 வகையான உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய போன்சாய் மரங்கள், நாய்க் கண்காட்சி, பழங்கால கார்களின் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் பல ஆயிரம் மலர்களை கொண்ட திருவள்ளுவர் மலர் கூடை அமைக்கப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சி நாளை (பிப்.25) வரை நடைபெறும். பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமிகளுக்கான பொழுது போக்கு விளையாட்டு அம்சங்கள், உணவகங்கள், தனியார் சார்பில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.ஏ.ஆர்.) துணை இயக்குநர் ஜெனரல் ஆர்.சி.அகர்வால், பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, தோட்டக்கலை துறை முதன்மையர் ஐரின் வேதமணி, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் விஜயகுமார், நாகராஜ், வரதராஜ், குமார், ராமகிருஷ்ணன், காட்வின், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.