

உதகை: உதகை நகராட்சியின் நீராதாரங்களில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதால், கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியிலுள்ள 36 வார்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர, புற்றீசல் போல் அனைத்து பகுதிகளிலும் காட்டேஜ்கள் பெருகியுள்ளன. இவற்றுக்கு உள்ளூரில் உள்ள 9 நீர்த் தேக்கங்களில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யாததால், மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளிலுள்ள அணைகள், தடுப்பணைகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் நிலவிய பனிப்பொழிவை அடுத்து, வறட் சியான காலநிலை நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 30 செ.மீ. கோடை மழை பெய்யும். இந்த மழை 15 செ.மீ. அளவுக்கு பெய்தால் மட்டுமே, நடப்பாண்டு கோடை காலத்தில் நிலவும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நேற்றைய நிலவரப்படி, உதகை நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி - 21 அடி ( இருப்பு 50 அடி ), மார்லிமந்து - 10 ( 23 ), டைகர் ஹில் - 30 ( 39 ), கோரிசோலா - 25 ( 35 ), அப்பர் தொட்டபெட்டா - 20 ( 31 ), லோயர் தொட்டபெட்டா - 12 ( 14 ), லோயர் கோடப்பமந்து - 12 ( 13 ), ஓல்டு ஊட்டி - 5 ( 6 ), கிளன்ராக் - 6 ( 7 ) அடி வரை அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.
உதகையில் பெரும்பாலான வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணை, மொத்த அடியான 50 அடியில், கடந்தாண்டில் இதே நேரத்தில் 26 அடி வரை தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது 21 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அனைத்து அணைகளிலும் 5 அடி வரை தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வறட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில், இருப்பில் உள்ள தண்ணீர் மேலும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
உதகையில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் இரண்டாவது வாரத்திலேயே கோடை வெப்பத்தால் சமவெளி மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் கணிசமாக வர வாய்ப்புள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். அந்த சமயங்களில் குடிநீர் தேவை வழக்கத்தை விட அதிகரிக்க கூடும் என்பதால், நகராட்சி நிர்வாகத்துக்கு தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறும்போது, “கடந்த ஆண்டை பார்க்கும் போது பார்சன்ஸ் வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா உள்ளிட்ட முக்கிய நீராதாரங்களில் தண்ணீர் குறைந்துள்ளது. கோடை சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.