கொடிவேரி தடுப்பணைக்கு ஓராண்டில் 8.65 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கொடிவேரி தடுப்பணைக்கு ஓராண்டில் 8.65 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
Updated on
1 min read

ஈரோடு: கடந்த ஆண்டு கொடிவேரி தடுப்பணைக்கு 8.65 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ.49 லட்சம் கட்டணமாக வசூலாகியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையைக் கடந்து பவானி ஆற்றில் செல்கிறது. கொடிவேரி தடுப்பணை நிரம்பி அருவி போல், நீர் விழுவதால், இதில் குளிப்பதற்காக ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். கொடிவேரி தடுப்பணையில் குளிக்கவும், பூங்காவுக்கு செல்லவும், நீர்வளத் துறை சார்பில், ஒருவருக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டு தோறும் கணிசமான வருவாய் நீர்வளத் துறைக்கு கிடைக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் விடுமுறை என்பதால் அந்த ஒரு மாதத்தில் மட்டும் 77 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தடுப்பணைக்கு வந்துள்ளனர் இதையடுத்து, கல்வி நிறுவனங்களின் கோடை விடுமுறையால் ஏப்ரலில் 1.23 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.78 லட்சம் பேரும் கொடிவேரிக்கு வருகை புரிந்துள்ளனர்.

இதேபோல், ஜூன் மாதம் 96 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு கொடிவேரி தடுப்பணைக்கு மொத்தம் 8.65 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம் ரூ.49 லட்சத்து 47 ஆயிரம் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. அந்தத் தொகை அனைத்தும் நீர்வள ஆதாரத் துறையின் வருவாய் பிரிவு கணக்கின் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in