

நாமக்கல்: ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடை கடந்த 6 மாத காலமாக நீடிப்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. தவிர, அங்கு மீன் சமைத்து வழங்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. காவிரி ஆற்றுப் பாசனத்தை பிரதானமாகக் கொண்டு பரமத்தி வேலுார் சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
விவசாயத்திற்கான பாசன ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன் பரமத்தி வேலுார் அருகே ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.
இதுபோல், தடுப்பணை அருகே பாசன வசதிக்காக ராஜவாயக்கால் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணை அதையொட்டி வயல்வெளி இயற்கை எழில் மிகுந்திருப்பது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு சுற்றுலாப் பயணிகளை வருகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்தும் வசதி, அணையில் பாதுகாப்பாக குளிப்பதற்கு இடம் போன்றவை இருப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.
சுற்றுலாப் பணிகள் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அணையின் அருகே மாவட்ட நிர்வாகம் மூலம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்காரணமாக விடுமுறை தினங்களில் ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பை மையப்படுத்தி தடுப்பணை அருகே மீன் சமைத்து தருவோரும் கணிசமான அளவில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளிக்க வந்த இரு இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பணை ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் பிற மாவட்டங்களில் இருந்து ஜேடர்பாளையம் தடுப்பணை காவிரி ஆற்றில் குளித்து மகிழ வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் மீன் சமைத்து வழங்குவோரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இதுகுறித்து வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறுகையில், ``காவிரி தடுப்பணை மற்றும் ராஜவாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. இது குளிக்க சரியாக உள்ளது.
எனினும், குளிக்க அனுமதிக்காதது நீண்ட தொலைவில் இருந்து குழந்தைகளுடன் வந்த எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
ஆபத்து மிகுந்த பகுதிகள் இருந்தால், அங்கு குளிக்க வேண்டாம் என எச்சரிக்கைப் பலகை வைக்கலாம். அதேபோல் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளலாம்.
இதனால் விபத்து அபாயத்தை தவிர்க்க முடியும். இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
இதுகுறித்து மீன் சமைத்து வழங்குவோர் கூறுகையில், ``ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் 50 பேர் மீன் பிடித்து சுற்றுலாப் பயணிகளுக்கு சமைத்து தரும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஆற்றில் குளிக்க கடந்த 6 மாத காலமாக தடைவிதிக்கப்பட்டதால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தடுப்பணை ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.