தடையை மீறி தடுப்பணையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

ஆழியாறு அருகே பள்ளிவிளங்கால் அணைக்கட்டு பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்.
ஆழியாறு அருகே பள்ளிவிளங்கால் அணைக்கட்டு பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

பொள்ளாச்சி: ஆழியாறு அருகே பள்ளிவிளங்கால் தடுப்பணையில் சுழல் மற்றும் புதைமணல் ஆபத்தை அறியாமல் வெளியூர்வாசிகள் குளித்து வருவதால் அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி - வால்பாறைசாலையில் ஆழியாறு அணை அருகே பள்ளிவிளங்கால் தடுப்பணை உள்ளது. ஆழியாறு ஆற்றில் கட்டப்பட்டுள்ள இந்த தடுப்பணையில், ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். அணையின் அருகிலேயே ரம்மியமாக காணப்படும் இந்த தடுப்பணையில் பல்வேறு இடங்களில் நீர்ச் சுழல்களும், புதைமணல் பகுதிகளும் இருப்பதால் ஆபத்து நிறைந்து காணப்படுகிறது.

சுற்றுலா தலமான ஆழியாறு அணைக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள், அதன் அருகில் உள்ள பள்ளிவிளங்கால் தடுப்பணைக்கு சென்று குளிக்கின்றனர். சுழலில் சிக்கியும், ஆழமான பகுதிக்கு சென்று புதைமணலில் சிக்கியும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, தொடர் விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் பள்ளிவிளங்கால் தடுப்பணைக்கு வருகின்றனர். அங்கு ‘நீர்ச் சுழல்கள் நிறைந்த பகுதி, சுற்றுலா பயணிகள் குளிக்ககூடாது’ என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதனை படித்து விட்டு தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிக்க செல்கின்றனர். வெளியூரில் இருந்து ஆற்றுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளில், பெரும்பாலான இளைஞர்கள் மது போதையிலும், குளிக்கும் ஆசையிலும், நீச்சல் பழகும் ஆர்வத்திலும் ஆற்றில் இறங்கி சுழல் மற்றும் புதைமணலில் சிக்கி உயிரிழக்கின்றனர். இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தாலும், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “தடுப்பணை பகுதியில் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க அணைக்கட்டில் நீர்ச்சுழல், புதைமணல் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து மேலும் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். சுற்றுலாபயணிகள் அதிகம் வரும் விடுமுறை நாட்களில் போலீஸார் தடுப்பணை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in