

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறை சார்பில் யானை பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தயானைகள், சவாரி, மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்நிலையில், முகாமில் யானைபொங்கல் விழா நேற்று நடைபெற்றது. ஆற்றில் யானைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்குள்ள விநாயகர் கோயிலுக்கு சென்ற யானைகள் விநாயகர் முன்பு மண்டியிட்டு வணக்கம் செய்தன. மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்தனர்.
யானைகளுக்கு பொங்கல், கனிகள், கொப்பரை தேங்காய்ஆகியவற்றை பாகன்கள் வழங்கினர். பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை,கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. இந்த யானை பொங்கல் விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: ‘‘யானை பொங்கல் நிகழ்ச்சியை காண்பதற்காக இங்கு வந்தோம். ஒரே இடத்தில் 17 யானைகளை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. வனத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் யானைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விழாவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் பார்கவ்தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், வனசரகர்கள் சுந்தரவேல், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.