

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலமான பேரிஜம் ஏரிக்குச் செல்ல 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் வனத்துறைக்கு சொந்த மான மோயர் பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தனியாக வனத் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். அடர்ந்த வனப் பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளதால் இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்ததால் கடந்த செப்டம்பர் முதல் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் அனுமதி மறுத்தனர்.
தற்போது காட்டு யானைகள் கூட்டம் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து, பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் அனுமதியளித்துள்ளனர். பேரிஜம் ஏரிக்கு செல்ல விரும்புவோர், வனத்துறை அலுவலகத்தில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை அனுமதி சீட்டு பெறலாம். மோயர் பாய்ண்ட் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் பலத்த சோதனைக்கு பின்பே பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
கழிப்பறை வசதி: வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பைன் பாரஸ்ட் பகுதியில் முதன்முறையாக கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.