

தேனி: பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு வைகை அணை பூங்காவில் மினி ரயில், படகுகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாய் அதிகரித்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இடது கரை பூங்காவைப் பொறுத்தளவில் சிறுவர்கள் பூங்கா, பல்வேறு வகையான சிலைகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவையும், வலது கரையில் உயிரியல் பூங்கா, இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. மேலும் மினிரயில், சிறிய நீர்தேக்கத்தில் இயக்கப்படும் படகுகள் போன்றவை குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாய் கவர்ந்து வருகிறது.
பூங்கா நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆகும். மினிரயிலில் பெரியவர்களுக்கு ரூ.6-ம், குழந்தைகளுக்கு ரூ.3-ம், படகுகளுக்கு ரூ.90-ம் கட்டணமும் பெறப்படுகிறது.வார நாட்களில் காலை 6 முதல் மாலை 6 மணி வரையும், சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 8 மணி வரையும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மினிரயிலும், படகு சவாரியும் ஞாயிறு,அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.
தற்போது பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ரயில்களும், படகுகளும் சில தினங்களாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் குழந்தைகளின் குதூகல சப்தமும், சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரமும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வைகைஅணை பூங்கா களைகட்டியுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை ஊழியர்கள் கூறுகையில், “ஞாயிறு உள்ளிட்ட விடுமுறையிலே மினிரயில் இயக்கப்படுகிறது. தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் தொடர்ந்து சில நாட்களாக ரயில் மற்றும் படகுகள் இயக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வருவாயும் உயர்ந்துள்ளது” என்றனர்.