

விருத்தாசலம்: “கடலூர் சில்வர் பீச்சில், ‘நெய்தல் பொங்கல் பெருவிழா - 2024’என்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு ஜன. 17-ம் தேதி நடை பெறுகிறது. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் சிங்கரின் இன்னிசை விழாஉள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
எனவே முன்னேற்பாட்டு நடவடிக்கையாக, நாளை (ஜன. 14) முதல் 17-ம் தேதி வரைகடலூர் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது” என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். கடலூர் சில்வர் பீச் கடற்கரைப் பகுதியில் பொங்கல் கொண்டாட்ட தருணத்தில், அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள்.
இந்தச் சூழலில் இங்கு கலைநிகழ்வுகளுக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘கடலில் குளிக்கக்கூடாது’ என்று ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதே நேரத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை பகுதி கடற்கரைகளிலும் பொங்கலுக்கு அடுத்து வரும் 3 நாட்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இங்கு குளிக்கத் தடை எதுவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்படவில்லை.