

உதகை: சுற்றுலா பயணிகள் வசதிக்காக வரும் 18 மற்றும் 21-ம் தேதிகளில் விடுமுறை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருவதால், அவர்களின் வசதிக்காக விடுமுறைக் கால சிறப்பு ரயில் வரும் 18 மற்றும் 21-ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில், வரும் 18-ம் தேதி உதகையிலிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும். 21-ம் தேதி குன்னூரிலிருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு,
9.40 மணிக்கு உதகை சென்றடையும்.சிறப்பு ரயில் 80 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளுடன் இயக்கப்படும். இதேபோல் உதகை - மேட்டுப்பாளையம் இடையே 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். உதகையிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் உதகை முதல் குன்னூர் வரை 80 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளுடனும், குன்னூரிலிருந்து மேட்டுப் பாளையம் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 92 இரண்டாம் வகுப்பு இருக்கைகளுடனும் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.