

ஆண்டிபட்டி: இரு பூங்காக்களையும் வைகை அணையின் இணைக்கும் தரைப்பாலத்தை தண்ணீர் மேவி விட்டது. இதனால் வலதுகரையில் உள்ள மினி ரயில், படகு இயக்கம் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாய் குறைந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் வைகை அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இது விளங்குகிறது. அணைக்கு முன்புறம் சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்குக்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது வலதுகரை, இடது கரை என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இடது கரை பூங்காவைப் பொறுத்தளவில் சிறுவர்கள் பூங்கா, பல்வேறு வகையான சிலைகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவையும், வலது கரையில் உயிரியல் பூங்கா, மினி ரயில் இயக்கம், இசை நீரூற்று, படகு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆகும். காலை 6 முதல் மாலை 6 மணி வரையும், சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 8 மணி வரையும் அனுமதி உண்டு.
தற்போது வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் இரண்டு பூங்காக்களையும் இணைக்கும் தரைப்பாலத்தை மேவிச் செல்கிறது. இதனால், ஒரு பூங்காவில் இருந்து இன்னொரு பூங்காவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே, வலது கரை பூங்காவில் வருவாய் ஈட்டக்கூடிய மினி ரயில், படகுகள் இயக்கம், உயிரியியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்தது வருவாய்: மினி ரயிலில் பெரியவர்களுக்கு ரூ.6-ம், குழந்தைகளுக்கு ரூ.3-ம் கட்டணம் பெறப்படுகிறது. 5 பெட்டிகளில் சுமார் 40 பேர் பயணிக்கலாம். தினமும் சுமார் 500 பேர் பயணிப்பர். ஆனால் பயணிகள் இப்பகுதிக்கு வர முடியாததால் ரயிலை தொடர்ந்து இயக்க முடியவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணிகள் வந்த பிறகே நீண்ட இடவெளிக்குப் பிறகு இயக்கப்படுகிறது. இதே நிலை மினிபடகுகளை இயக்குவதிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய் பகுதியாக குறைந்துள்ளது.
நீர்வளத்துறை ஊழியர்கள் கூறுகையில், தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் அதை கடந்து மினிரயில், படகு இயக்க பகுதிக்கு சுற்றுலா பயணிகளால் வர முடியவில்லை. இதனால் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. ஆகவே தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.