

காரைக்குடி: இந்திய நாட்டுக்கான பிரிட்டன் தூதர், செட்டிநாடு கலைநுட்பத்தை கண்டு வியந்தார்.
இந்திய நாட்டுக்கான பிரிட்டன் தூதராக அலெக்ஸ் எல்லீஸ் உள்ளார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள செட்டிநாடு பகுதிகளை பார்வையிட்டார். அவர் கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனையை பார்வையிட்டார். பின்னர் நடந்தே சென்று ஊர் முழுவதும் உள்ள நகரத்தாரின் பழமையான வீடுகளை பார்வையிட்டார். செட்டிநாடு கலைநுட்பத்தை கண்டு வியந்த அவர், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கிராமங்கள் என புகழ்ந்தார்.
தொடர்ந்து, ஆத்தங்குடி அரண்மனையையும் பார்வையிட்ட அவர், அப்பகுதியில் ஆத்தங்குடி பூங்கற்கள் (டைல்ஸ்) தயாரிக்கும் முறையை கண்டு ஆச்சரியமடைந்தார். அவருக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். மேலும், அவருக்கு சுற்றுலா தொடர்பான கைடுகளையும் வழங்கினார். முன்னதாக, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை சார்பில் பிரிட்டன் தூதர் மற்றும் அவரது குடும்பத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.