

கொடைக்கானல்: தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை, வாரவிடுமுறை நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. பிரையன்ட்பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஸ்கார்டன், குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை ஆகிய சுற்றுலாத் தலங்களில் இன்றும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஏரியில் நீண்டநேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். கொடைக்கானலில் நேற்று குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருந்தது.
போக்குவரத்து நெரிசல் நேற்று அதிகாலை முதலே வழக்கத்தைவிட சுற்றுலா வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் மலைச் சாலையில் வரிசையாகச் சென்றபடி இருந்தன. இதனால் சுங்கச்சாவடி, வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. குறிப்பாக மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, ஏழுரோடு சந்திப்பு, ஏரிச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால் பலரும் சாலையோரத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.