ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் வருவது எப்போது? - ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
ராமேசுவரம்: நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆன்மிக மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை' உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறியதாவது: 2022-ம் ஆண்டு (டிச.23) இறுதியில் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராமேசுவரத்திற்கு வரக்கூடிய ரயில்கள் மண்டபம், ராமநாதபுரம் வரையே இயக்கப்பட்டன. பின்னர் மராமத்து பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் புதிய ரயில் பாலப் பணிகளுக்காக முற்றிலுமாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. இதற்கான காலக்கெடுவும் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் வெளிமாநிலங்களி லிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே புதிய ரயில் பாலப் பணிகளை விரைவில் முடித்து ராமேசுவரத்துக்கு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும், எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கரோனா பரவல், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றங் களால் நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் புதிய ரயில் பாலப் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை. தற்போது வரையிலும் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பாலத்தின் நடுவே தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மற்ற பணிகளை விரைவுபடுத்தி பிப்ரவரி 2024-க்குள் நிறைவு செய்யவும், பிரதமர் நரேந்திர மோடி புதிய ரயில் பாலத்தில் ரயில் சேவையை தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.
