

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சபரிமலை சீஸன் நடப்பதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் அதிகம் வருகின்றனர். எனவே, படகு சவாரிக்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 90 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சபரிமலை சீஸன் காலத்தில் கூட்டம் அலைமோதும். தற்போது சபரிமலை சீஸன் தொடங்கியுள்ளது. ஜனவரி 20-ம் தேதி வரை சீஸன் இருக்கும். இந்த சீஸனுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளும் வருகின்றன. எனவே, கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், முதன்மையான பொழுதுபோக்கு அம்சமான படகு சவாரி செல்ல அனைவராலும் முடியாத நிலை உள்ளது. தற்போது விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அதிகபட்சமாக 13,000 பேர் வரை மட்டுமே விவேகானந்தர் பாறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுதவிர வட்டக்கோட்டைக்கு செல்லும் இரு சொகுசு படகுகளிலும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்கின்றனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை காலத்தில் 2 மணி நேரம் கூடுதலாக அதாவது, காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடைபெறும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடை ஒரு மணி நேரம் கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக திறந்து வைக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 20-ம் தேதிக்கு மேல் படகு சேவையை 2 மணி நேரம் கூடுதலாக நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பயன்பெறுவர் என, சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.