ஆரல்வாய்மொழியில் பராமரிப்பின்றி பாழாகும் ஆய் மன்னர் காலத்து கோட்டை மண்டப சுவர்!

பல நூற்றாண்டுகளை கடந்தும் இப்போதும் உறுதியாக நிற்கும் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி.
பல நூற்றாண்டுகளை கடந்தும் இப்போதும் உறுதியாக நிற்கும் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி.
Updated on
2 min read

நாகர்கோவில்: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ஆயி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியம் மிக்க கோட்டை மண்டப சுவர்கள் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. இவற்றை வரலாற்று சின்னங்களாக அரசு அறிவித்து பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மலைகளை இணைக்கும் வகையில் கோட்டை கற்களை கொண்டு கட்டப்பட்ட மண்டபங்கள் பழமையான வரலாற்றை பறைசாற்றுகின்றன.

நாஞ்சில் நாட்டு பகுதிகளை கி.பி 10-ம் நூற்றாண்டு வரையிலும் ஆயி வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். பாண்டிய நாடு, சேர நாட்டுக்கு இடைப்பட்ட நாடாக ஆயிநாடு இருந்துள்ளது. நீர் மற்றும் நிலவளம் கொண்ட இப்பகுதி அண்டை நாட்டினரை கவர்ந்தது. இதன் காரணமாக 18-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நாஞ்சில் நாட்டில் தொடர்ந்து படையெடுப்புகளும், கொள்ளை கும்பல்களின் ஆக்கிரமிப்புகளும் நடந்தன. இதனால் இயற்கை அரண் சூழ்ந்த ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஆரல்வாய்மொழி பாதையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆயி மன்னர்களுக்கு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழியில் பராமரிப்பற்ற நிலையில் காணப்படும்<br />ஆய் மன்னர் கால கோட்டைச் சுவர்.
ஆரல்வாய்மொழியில் பராமரிப்பற்ற நிலையில் காணப்படும்
ஆய் மன்னர் கால கோட்டைச் சுவர்.

மலைகளை இணைத்து சுவர்: இதையடுத்து ஆரல்வாய்மொழியில் இரு பக்கங்களில் உள்ள மலைகளை இணைத்து கடுக்கரை வரை கோட்டைச் சுவர் எழுப்பபட்டது. ஆரல்வாய்மொழி கரைக் கோட்டை பாண்டிய நாட்டு படையெடுப்பில் இருந்து ஆயி நாட்டையும், சேர நாட்டையும் பாதுகாக்கும் அரணாக அமைந்ததால் ஆயி மன்னர்களும், சேர வம்ச மன்னர்களும் இக்கோட்டையை புனரமைத்து பாதுகாத்து வந்தனர். ஆனால் மன்னராட்சி முடிந்து குடியாட்சி வந்த பின்னர் கோட்டையை பராமரிக்காததால் அழியத் தொடங்கியது. தற்போது ஆரல்வாய்மொழியில் கோட்டை மண்டபங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றையும் பராமரிக்காமல் போனால் சில ஆண்டுகளில் இவையும் அழியும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் கோட்டை மண்டபங்கள் மண் சுதையால் அமைக்கப்பட்டிருந்தன. ஆயி மன்னர் கருணானந்தகன் காலத்தில் கோட்டை புனரமைக்கப்பட்டது. கி.பி 1729-ல் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா ஆட்சியில் ஆரல்வாய்மொழி கோட்டை கற்களால் கட்டப்பட்ட மதில் சுவருடன் கூடிய கோட்டையாக மாற்றப்பட்டு குமரி கடற்கரை வரை நீட்டிக்க பட்டது. இதனால் ஆயிநாடு பல்லாண்டு காலமாக படையெடுப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டது. காலப்போக்கில் நடந்த ஒரு படையெடுப்பில் இக்கோட்டைச் சுவரின் பெரும்பாலான பகுதி இடிந்து போனது. தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே சுவர் எஞ்சி நிற்கிறது.

மேலும் கோட்டை நுழைவாயிலில் உள்ள ஆயுத சேமிப்பறை, வரி வசூல் செய்யுமிடம், படை வீரர்கள் தங்குமிடம் மட்டும் வரலாற்று சாட்சிகளாய் எஞ்சியுள்ளன. கடந்த 1970 வாக்கில் அண்ணா கல்லூரியின் வகுப்பறைகளுக்காக இவை அரசால் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் கல்லூரியின் நூலகம், ஆய்வகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கல்லூரி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு வகுப்புகள் மாற்றப்பட்டன. இதனால் மன்னர் கால நினைவு சின்னமான் கோட்டை பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. இதனை பாதுகாத்து வரும் தலைமுறையினருக்கு வரலாற்று நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டியது அவசியம். எனவே, அருங்காட்சியகமாக இதை மாற்றி அரசு பராமரிப்பதுடன் சுற்றுலா மையமாக மாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in