

திருச்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் அமைந்துள்ளது. 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் இதுவரை 129 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு ஆம்பி தியேட்டர், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, படகு குழாம், சிறு பாலங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புழு வடிவத்தில் நீண்ட குகை ஒன்று உள்ளது. அக்குகைக்குள் பார்வையாளர்கள் செல்லும்போது புழுவின் வயிற்றுக்குள் செல்வதை போன்று உணர்வை ஏற்படுத்தும்.அக்குகைக்குள் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
ஆங்காங்கே இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வரும் சிலர் தங்களது பெயர், காதல் சின்னம் போன்றவற்றை ஓவியத்தின் மீது கிறுக்கி வைத்துள்ளனர். இதனால், ஓவியங்கள் சேதமடைந்து வருகின்றன. இதுகுறித்து பூங்கா பராமரிப்பில் உள்ள வனத் துறை ஊழியர்கள் சிலர் கூறியது: பூங்காவுக்கு வரும் மக்களும் சரி, காதல் ஜோடிகளும் சரி கொஞ்சம் பொது சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். செடி, கொடிகளுக்கு நடுவே நின்று போட்டோ எடுப்பது, பூக்களை பறிப்பது போன்றவற்றை செய்கின்றனர்.
இதனால் பூக்களும், செடிகளும் மட்டுமின்றி, வண்ணத்துப்பூச்சிகளும் தான் பாதிக்கப்படுகின்றன. மேலும் குகைக்குள் சிலர் பெயர்கள், படம் என கிறுக்கி வைக்கின்றனர். அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறோம். மேலும், அத்துமீறும் காதல் ஜோடிகளை கடுமையாக எச்சரித்து வெளியேற்றி வருகிறோம். ஆயினும் பொறுப்புணர்வு என்பது இயற்கையாகவே நமக்கு வேண்டும் என்றனர். பூங்காவில் 12 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதேபோல குகை போன்ற மறைவிடங்களுக்குள்ளேயும் சிசிடிவி கேமரா வைத்தால் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பாதுகாக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.