

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் மாற்றுத் திறன் கொண்ட சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் உள்பட சிறுவர்களுக்கான புதிய விளையாட்டு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. சேலத்தை அடுத்த குரும்பப்பட்டியில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் 78 ஏக்கரில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு புள்ளி மான், கடமான், நரி, குரங்கு, முதலை, ஆமை, மயில், மலைப்பாம்பு, வெளிநாட்டு நீர் பறவைகள் உள்பட 22 வகையான உயிரினங்கள், 200-க்கும் கூடுதலான எண்ணிக்கையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்காட்டை ஒட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளதால், இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக எண்ணிக்கையில் உள்ளது. சிறு பூங்காவாக உள்ள இதனை புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்கு களையும் பராமரிக்கும் நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பூங்காவில் சிறுவர்களுக்கான வளாகத்தை மேம் படுத்தும் பணியும் தற்போது நடை பெற்றுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் கூறியது: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு வளாகத்தை விரிவுபடுத்தும் பணி ரூ.15 லட்சத்தில் நடை பெற்றுள்ளது. பூங்காவில், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் இருந்த விளையாட்டு சாதனங்கள் தற்போது புதியதாக வரவழைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் விளையாடுவதற்கான பிரத்யேகமான விளையாட்டு சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதில், மாற்றுத் திறன் கொண்ட சிறுவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே சுற்றக்கூடிய ராட்டினம் போன்ற சாதனம் உள்பட சில பிரத்யேக சாதனங்கள் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளன. பூங்கா நுழைவு வாயிலில் ‘ஐ லவ் குரும்பப்பட்டி ஜூ’ என்ற வாசகம் கொண்ட செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வருபவர்கள் நுழைவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வசதியாக, ‘க்யூ ஆர் கோடு’ முறை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.