Published : 09 Dec 2023 04:53 PM
Last Updated : 09 Dec 2023 04:53 PM

தனுஷ்கோடியில் குதிரைகள் சரணாலயம் அமைக்கப்படுமா?

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றித் திரியும் குதிரைகள்.

ராமேசுவரம்: ராமேசுவரம் தீவின் மரபுரிமைச் சொத்தாகக் கருதப்படும் குதிரைகளுக்குச் சரணாலயம் அமைக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேசுவரம் தீவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை முதல் பாம்பன் குந்துக்கல் கடற்கரைப் பகுதி வரையிலும் அரியவகை குதிரைகள் நூற்றுக் கணக்கில் வாழ்கின்றன. இந்தக் குதிரைகள் ராமேசுவரம் தீவுக்கு வந்து சேர்ந்த வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. தமிழகம் மற்றும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் அரேபிய தீபகற்பத்தில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்துள்ளனர். 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம், திருப்புடையார் கோயில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலமும் அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சியும் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இறந்த காரணத்தாலும், குதிரைகளை போர்ப் பயிற்சிக்குப் பழக்குவதற்கு சரியான ஆட்கள் இல்லாத காரணத்தாலும் வாணிபத்துக்காக வந்த அரேபியர்களை ஆட்சியாளர்கள் நியமித்தனர். அரேபிய வீரர்களின் திறமையையும், வீரத்தையும் கண்ட மன்னர்கள் அவர்களை குதிரைப் படைத் தலைவர்களாகவும் நியமித்தனர். அரேபிய குதிரை வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தான் முதலில் ‘பாளையம்' என்று அழைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை சிவன் கோயிலில் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரர் சிலை உள்ளது. அச்சிலைக்கு குதிரை இராவுத்தர் என்றும் அம்மண்டபத்துக்கு குதிரை இராவுத்தர் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

ராமேசுவரம் குதிரைகள்: 1988-ம் ஆண்டு பாம்பன் சாலைப்பாலம் திறக்கப்படுவதற்கு முன்பு ராமேசுவரம் தீவை ராமநாதபுரம் நிலப்பரப்புடன் இணைக்க ரயில் சேவை மட்டுமே இருந்தது. அதுவரை உள்ளூர் போக்குவரத்துக்கு குதிரை வண்டிகளை மட்டுமே மக்கள் அதிகம் சார்ந்திருந்தனர். 1988-க்கு முன்னர் ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ராமநாத சுவாமி கோயில், தனுஷ்கோடி, ராமர் பாதம், அக்னி தீர்த்தம் உள்ளிட்ட இடங்களுக்கு குதிரைகள் பூட்டிய வண்டிகளையே பயன்படுத்தினர். 1988-க்கு பின்னர், பாம்பன் சாலைப் பாலம் திறக்கப்பட்டதால், மோட்டார் வாகன போக்குவரத்து அதிகரித்தது. உள்ளுர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் குதிரை வண்டி பயன்பாட்டைத் தவிர்த்தனர்.

இதனால் வருமானமின்றி குதிரைகளுக்குத் தீவனம்போட முடியாமல் தவித்த குதிரை உரிமையாளர்கள், தனுஷ்கோடி முதல் பாம்பன் கடலோரப் பகுதிகளில் குதிரைகளை மேய்ச்சலுக்கு விட்டனர். இப்போது இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குதிரைகள் கடற்புரத்தில் வசிக்கின்றன. இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் கவுசிக் கூறியதாவது: ராமேசுவரம் தீவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குதிரைகள் வாழ்ந்து வருகின்றன. இந்தக் குதிரைகளை மக்கள் கால்நடைகளாக வளர்த்து காலங்காலமாக சவாரி செய்வதற்குப் பயன்படுத்தி வந்தனர். ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடற்கரைச் சூழலில் அந்தக் குதிரைகள் பார்ப்பது மகிழ்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது. ராமேசுவரம் தீவின் கடற்கரையோரங்களில் சுற்றித் திரியும் குதிரைகளைக் காப்பதற்கு தனுஷ்கோடியில் குதிரைகள் சரணாலயம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x