இலங்கையிலிருந்து ராமேசுவரத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டம்

தலைமன்னார் துறைமுகம்
தலைமன்னார் துறைமுகம்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையின் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களிலிருந்து ராமேசுவரத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்தியா-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஜூலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய வருகையின்போது காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருநது இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரத்திலிருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை என இரு மார்க்கமாக கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தலைமையிலான அதிகாரிகள் தலைமன்னார் மற்றும் காங்கேசன் துறை ஆகிவற்றுக்கு நேரில் சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைமன்னார் இறங்குதுறையில் ஆய்வு மேற்கொண்ட<br />இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே.
தலைமன்னார் இறங்குதுறையில் ஆய்வு மேற்கொண்ட
இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே.

இதுகுறித்து கோபால் பாக்லே கூறிய தாவது: தலைமன்னார், காங்கேசன்துறையில் உள்ள இறங்குதுறை பகுதிகளை பார்வையிட்டேன். இப்பகுதிகளிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படும். தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழி சாலை பாலம் அமைப்பது குறித்த திட்டத்துக்கான ஆய்வறிக்கையும் தயாரிக்கப்பட உள்ளது. இவை இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கும் என்று கூறினார்.

1981-ல் நிறுத்தப்பட்ட போக்குவரத்து: இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 24.2.1914-ல் தொடங்கப்பட்டது. 22.12.1964-ல்வீசிய புயலில் தனுஷ்கோடியின் பெரும் பகுதி அழிந்ததது. இதையடுத்து 1965-ம் ஆண்டிலிருந்து ராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து 1981-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in