

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் கட்டப்பட்டு நீண்ட காலமாக பூட்டப்பட்டிருக்கும் தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள் சனிப்பெயர்ச்சி விழாவுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல, ஆன்மிகப் பூங்கா பணிகளும் இன்னும் முழுமையடையவில்லை. இதனால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். புதுச்சேரி அரசு சார்பில் திருநள்ளாறு, ‘கோயில் நகரம்’ என அறிவிக்கப்பட்டு, ஹட்கோ நிதியுதவியுடன் கோயில் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2010-ம் ஆண்டு முதல் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. மேலும் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, நளன் குளம் அருகில் ரூ.5.50 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டு, 2017 மே 6-ம் தேதி திறக்கப்பட்ட உணவகம் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள், பேட்டை சாலையில் ரூ.5.93 கோடியில் கட்டப்பட்டு 2021 பிப்.4-ம் தேதி திறக்கப்பட்ட உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி உள்ளிட்ட முக்கியமான கட்டிடங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் புதர்கள் மண்டிக் காணப்படுகின்றன. சனிப்பெயர்ச்சிக்கு முன்பாக இவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிடும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிச.20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ள நிலையில், இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான செயல்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதேபோல, மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ், ரூ.7 கோடி செலவில் ஆன்மிகப் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த ஏப்.21-ம் தேதி புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியால் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது. இப்பூங்காவில் நவக்கிரக தலங்கள், தியான மண்டபம் உள்ளிட்டபல்வேறு அம்சங்கள் உள்ளன. இங்குள்ள தியானக் கூடத்தில் ஒலி, ஒளி காட்சிகளுக்கான அமைப்புகள், நவக்கிரக தல அமைப்புகளில் சுவாமி சிலைகள் அமைப்பது உள்ளிட்டவை சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறியது: தங்கும் விடுதி கட்டப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை பயன்பாட்டுக்கு வராததால் பொலிவிழந்து காணப்படுவது வேதனையளிக்கிறது. இதேபோல, ஆன்மிகப் பூங்காவில் தியான மண்டபம் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே பொலிவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள மூலிகைப் பூங்கா புதர்மண்டிக் காணப்படுகிறது. எனவே, சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாக பூங்காவை சீரமைப்பதுடன், தங்கும் விடுதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
திருநள்ளாறு தொகுதி எம்எல்ஏ பி.ஆர்.சிவாகூறியது: நளன் குளம் அருகில் கட்டப்பட்டுள்ள உணவகம், வணிக வளாகக் கட்டிடங்கள், பேட்டை சாலையில் உள்ள தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, சனிப்பெயர்ச்சி விழாவுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுவிடும். ஆன்மிகப் பூங்காவில் நவக்கிரக தலத்தில் சுவாமி சிலைகள் அமைப்பதற்கு இன்னும் சிறிது காலமாகும் என்றார்.