

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், குளிர் நிலவுவதாலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. கொடைக்கானலுக்கு கடந்த மாதம் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த மாதம் தொடக்கம் முதலே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை படிப்படியாக குறையத் தொடங்கியது. காரணம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே கொடைக் கானல் மலைப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதும், சில நாட்களில் தொடர்ந்து மழை பெய்தும் வருகிறது.
இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாத் தலங்களை முழுமையாக கண்டு ரசிக்க முடியாத நிலையும், மழையால் ஏரியில் படகு சவாரி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை, நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. படகு குழாம்களிலும் சுற்றுலா பயணிகள் தென்படவில்லை. மற்ற சுற்றுலாத் தலங்களிலும் இதே நிலை இருந்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள சிறுவியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். விட்டு விட்டு சாரல் பெய்ததால் சுற்றுலாத் தலங்களை காண முடியாத படி பனி மூட்டம் நிலவியது. பகலில் வெப்ப நிலை அதிகபட்சம் 18 டிகிரி செல்சியஸ், இரவில் குறைந்தபட்சம் 11 டிகிரி செல்சியஸ் நிலவுவதால் அதிக குளிர் உணரப்படுகிறது.